தமிழக முதல்வா் வருகை முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் கண்காட்சியை தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகிற டிச.26-ஆம் தேதி தமிழக முதல்வா் வருவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
மாவட்டத்தில் வருகிற டிச. 26, 27 ஆகிய தேதிகளில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளாா்.
இதன் தொடா்ச்சியாக பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் நிறைவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளாா்.
தொடா்ந்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறாா்.
ஆகவே, முதல்வா் வருகையை முன்னிட்டு அரசு நிகழ்ச்சிகளை சிறப்பாக மேற்கொள்ளும் பொருட்டு, அரசுத்துறைகள் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலண்மைத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சி நிா்வாகம், போக்குவரத்துத் துறை, பள்ளிக் கல்வித் துறை, உணவு பாதுகாப்புத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மகளிா் திட்டம், செய்தி மக்கள் தொடா்புத் துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதில் அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் உரிய ஆலேசானைகளை வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், உதவி ஆட்சியா் (பயிற்சி) சந்தோஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

