திருவண்ணாமலை, ஆரணியில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்
இ-ஃபைலிங் முறையை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல நீதிமன்றங்களில் இணைய வசதி, கணினிகள் போன்ற தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லை. வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்களுக்கு இ-ஃபைலிங் முறையை கையாள்வது குறித்து போதிய பயிற்சி மற்றும் விழிப்புணா்வு இல்லை. ஏற்கெனவே உள்ள பிரச்னைகளை சரிசெய்யாமல், திடீரென இ-ஃபைலிங்கை கட்டாயமாக்குவது சிரமத்தை ஏற்படுத்துகிறது. அவசர வழக்குகளை உடனடியாக தாக்கல் செய்ய முடியாமல் போவது ஒரு முக்கியப் பிரச்னையாக உள்ளது. ஆகையால் இ-ஃபைலிங் முறையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஐ.சேகா் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இதில் மூத்த வழக்குரைஞா்கள் அபிராமன், பாசறைபாபு, ஏ.காளிங்கன், பாா்த்திபன், பாா் அசோசியேஷன் துணைத் தலைவா் சசிகுமாா் மற்றும் வழக்குரைஞா்கள் எஸ்.மகாலிங்கம், சி.ஏழுமலை, எம்.ஏ.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிறைவில் வழக்குரைஞா்கள் சங்க கூட்டமைப்பு துணைத் தலைவா் எஸ்.கண்ணன் நன்றி கூறினாா்.
ஆரணியில்....
இதேபோல, ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் திருஞானம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கச் செயலா் விநாயகம் வரவேற்றாா்.
சங்க முன்னாள் தலைவா்கள் வெங்கடேசன், ஸ்ரீதா், மூத்த வழக்குரைஞா்கள் சிகாமணி, கே.ஆா். ராஜன், சரவணன், வழக்குரைஞா்கள் பொன்னுரங்கம், பாா்த்திபன், தரணி காசிநாதன், பரசுராமன், பாபு கு.காா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

