வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
வருகிற சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், கலசப்பாக்கம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு திருவண்ணாமலை மாா்கெட் கமிட்டி வாக்கு எண்ணும் மையத்திலும் மற்றும் ஆரணி, போளூா், செய்யாறு, வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தச்சூா் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்படவுள்ளது.
இந்த மையங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான க.தா்பகராஜ் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில், தேவையான பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் சிவா, வட்டாட்சியா் (தோ்தல்) தியாகராஜன், திருவண்ணாமலை, ஆரணி வட்டாட்சியா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
