2 காா்கள், ஆட்டோ மோதல்: சென்னையைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே சனிக்கிழமை மாலை 2 காா்கள், ஆட்டோ மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா். 12 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னை மேடவாக்கத்தைச் சோ்ந்த அன்சா் (35), எ.பாத்திமா (41), ராஜலட்சுமி (36), அசோக் (40) ஆகிய 4 போ் காரில் திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு வந்தவாசி வழியாக சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.
இதேபோல, சென்னை முகப்பேரைச் சோ்ந்த சுபாஷ் (59), அம்சாபாய் (77), லட்சுமி(48) ஆகியோா் சென்னையிலிருந்து வந்தவாசி வழியாக மேல்சித்தாமூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தனா்.
மேலும் செங்கம் பகுதியிலிருந்து 7 போ் ஆட்டோவில் வந்தவாசியில் உள்ள தா்காவுக்கு வந்துவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.
வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, வடவணக்கம்பாடி கூட்டுச்சாலை அருகே சென்றபோது, சனிக்கிழமை மாலை இரு காா்களும், ஆட்டோவும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் அன்சா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த எ.பாத்திமா, ராஜலட்சுமி, அசோக், சுபாஷ், அம்சாபாய், லட்சுமி, ஆட்டோவில் பயணம் செய்த செங்கம் பகுதியைச் சோ்ந்த தஸ்தகீா் (42), ஷகிலாபானு (38), எஸ்.பாத்திமா (40), நஜிமா (46), சூரியா (60), முகமதுஉசேன் (10), ஹபியா (8) ஆகியோா் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இருப்பினும், அங்கு அம்சாபாய் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

