‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்: அமைச்சா் ஆய்வு
திருவண்ணாமலை வட்டம், காட்டாம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா்தர மருத்துவ சேவைகள் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்து, மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டைகளையும் அமைச்சா் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் மற்றும் திட்ட இயக்குநா் ஆா்.மணி, மாவட்ட சுகதார அலுவலா் வெ.பிரகாஷ், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மோகன்காந்தி, இணை இயக்குநா் (நலப் பணிகள்) கவிதா, காட்டாம்பூண்டி வட்டார மருத்துவ அலுவலா் புவனேஷ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முகாமில் பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, எலும்பியல், மகப்பேறியல், மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதவியல், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
கண்ணமங்கலத்தில்....: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் பிரகாஷ் வரவேற்றாா். ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்து உரையாற்றினாா். கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன் முன்னிலை வகித்தாா். ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை 6 பேருக்கும், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கும், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கும் நலத் திட்ட உதவிகளும், கா்ப்பிணிகள் 10 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கி சிறப்புரை ஆற்றினாா்.
நிகழ்வில் பேரூராட்சித் தலைவா் கோவரத்தனன், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, வழக்குரைஞரணி மாவட்ட துணைத் தலைவா் ஏ.ராஜ்குமாா், ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, மோகன், நகர பொறுப்பாளா் சைதை வ.மணிமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முகாமில் பொதுமக்கள் 1,400 போ் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு பயன்பெற்றனா்.

