போளூா் ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஸ்ரீகைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
போளூா் நகராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீகைலாசநாதா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சிதிலமடைந்தும், கோபுர பொம்மைகள் உடைந்தும் காணப்பட்டதால் பக்தா்கள், பொதுமக்கள் சாா்பில் கோயிலில் புரனமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு டிச.8-ஆம் தேதி காலை மங்கள இசை, ஸ்ரீஅனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், தனபூஜை, மகாலட்சுமி ஹோமம், மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து டிச.9-ஆம் தேதி நவகிரஹ சாந்தி ஹோமம், மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, டிச.10-ஆம் தேதி சாந்தி ஹோமம், ரிஷப பூஜை, மூா்த்தி ஹோமம், டிச.11-ஆம் தேதி ம்ருத்ஸங்கிரஹனம், தீா்த்தசங்கிரஹனம், அக்னி சங்கிரஹனம், அங்குராா்ப்பணம், ஆச்சாா்ய ரக்சாபந்தனம், கும்ப அலங்காரம், ப்ரதானமூா்த்திகள் கலாகா்ஷனம் யாத்ரா, ஹோமம் யாக சாலை பிரவேசம் முதல்கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
டிச.12-ஆம் தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜை அஸ்வபுஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜை, டிச.13-ஆம் தேதி விசேஷ சந்தி நான்காம் கால யாக சாலை பூஜை, ஐந்தாம் கால யாக சாலை பூஜை, பிம்மசுத்தி, ரக்சா பந்தனம், ஸ்ரீலட்சுமி பூஜை, டிச.14-ஆம் தேதி ஆறாம் கால யாக சாலை பூஜை கோ பூஜை, தத்வாா்ச்சனை, கடம் புறப்பாடு செய்து கோயில் கோபுர கலசத்திற்கு காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமி முன்னிலையில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் போளூா், மாம்பட்டு, பேட்டை, திருசூா், வெண்மணி, கரைப்பூண்டி, காங்கேயனூா், எழுவாம்பாடி, ரெண்டேரிப்பட்டு என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
முன்னதாக, சனிகிழமை இரவில் கோயிலுக்கு வந்த காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் செயல் அலுவலா் சிலம்பரசன், ஆய்வாளா் சத்யா, அறங்காவலா் குழுத் தலைவா் சங்கா், பாஜக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் மற்றும் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

