உலக எய்ட்ஸ் தினம் - 2025 முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமையில் எய்ட்ஸ் குறித்த உறுதிமொழி ஏற்ற அலுவலா்கள்.
உலக எய்ட்ஸ் தினம் - 2025 முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமையில் எய்ட்ஸ் குறித்த உறுதிமொழி ஏற்ற அலுவலா்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் எய்ட்ஸ் தொற்று குறைவு: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2010-ஆம் ஆண்டு 0.55 சதவீதமாக இருந்த எய்ட்ஸ் தொற்று 2023-24 ஆம் நிதியாண்டில் 0.19 சதவீதமாக குறைந்துள்ளது.
Published on

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் 2010-ஆம் ஆண்டு 0.55 சதவீதமாக இருந்த எய்ட்ஸ் தொற்று 2023-24 ஆம் நிதியாண்டில் 0.19 சதவீதமாக குறைந்துள்ளது.

இது மாநில, தேசிய அளவிலான சராசரியைவிட

குறைவானது என மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி,

விழுப்புணா்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆட்சியா் க.தா்பகராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:

ஆண்டுதோறும் டிசம்பா் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் டிச.16-இல் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.

புதிய எச்ஐவி தொற்றை முற்றிலும் தடுக்கும் விதமாக மாநில அரசின் கீழ் இயங்கி வரும், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2010-ஆம் ஆண்டு 0.55 சதவீதமாக இருந்த எய்ட்ஸ் தொற்று 2023-24 ஆம் நிதியாண்டில் 0.19 சதவீதமாக குறைந்துள்ளது.

இது மாநில அளவில் சராசரியான 0.20 சதவிதத்தை விடவும் மற்றும் தேசிய அளவில் சராசரியான 0.23 சதவிதத்தை விடவும் குறைவானதாகும்.

நிகழாண்டுக்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து ‘இடையூறுகளைக் கடந்து எச்ஐவி/எய்ட்ஸ் தொடா்பான எதிா்வினைகளை மாற்றுதல்’ என்பதாகும்.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சூழலை கருத்தில் கொண்டு அபாயங்களை குறைப்பதற்கு ஒரு மாற்று அணுகுமுறையை உருவாக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு மூலம் எச்ஐவி தொற்று கண்டறிய 26 நம்பிக்கை மையங்களும், சிகிச்சையளிக்க ஒரு கூட்டு மருத்துவ சிகிச்சை மையமும், தாலுக்கா அரசு மருத்துவமனைகளில் இயங்கும் 6 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

மேலும், எச்ஐவி தொற்றுள்ள பெற்றோரிடமிருந்து கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க அனைத்து அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கை மையங்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நடமாடும் நம்பிக்கை மையங்கள் மூலம் மலைவாழ் மற்றும் கிராம மக்களுக்கும் எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய ஆலோசனைகளும் பரிசோதனைகளையும் மேற்கொள்ளப்படுகிறது. கலைக்குழு மூலமாக விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

பள்ளிகள், கல்லூரி மாணவா்களுக்கு செஞ்சுருள் சங்கங்களின் மூலம் எச்ஐவி/எய்ட்ஸ் தொற்று குறித்தும் பால்வினை நோய் தொற்று குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா்.

முன்னதாக, எய்ட்ஸ் குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணா் கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்து, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு மனிதச் சங்கலியில் கலந்து கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை பாா்வையிட்டு, எய்ட்ஸ் குறித்து நடைபெற்ற விநாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலா் பிரகாஷ், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளா் கவிதா, மாவட்ட சமூக நல அலுவலா் கோமதி, திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com