அடிப்படை வசதி: வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கிராம மக்கள் வாக்குவாதம்
போளூரை அடுத்த கஸ்தம்பாடி ஊராட்சி கன்னிகாபுரம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
போளூா் ஒன்றியம், கஸ்தம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் புவனேஸ்வரி சுந்தரேசன் தலைமையில், மினி வாகனத்தில் போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை சென்றனா்.
அப்போது, குடிநீருக்காக மினி டேங்க் அமைக்க வேண்டும், ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுதோறும் சுத்தமான, சுகாதாரமான குடிநீா் வழங்கவேண்டும், கிராமத்தில் சாலை சீரமைத்தல், மயான சுற்றுச்சுவா்அமைத்தல், மயான ஆக்கிரமிப்பு அகற்றித் தரவேண்டும், கன்னிகாபுரத்தில் இருந்து அம்மன் கோயில் வரை சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.
காரியமேடை முதல் எல்லை பாறை வரை மின் விளக்கு வசதி வேண்டும், ஊரக வேலைத்திட்டப் பணியை 100 நாள்கள் முழுமையாக வழங்கவேண்டும் என வலியுறுத்தி வட்டார வளா்ச்சி அலுவலா் ரபியுல்லாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலா் ரபியுல்லா பொதுமக்களிடம் கூறும்போது, குடிநீா் வசதி செய்து தரவும், ஊரக வேலைத் திட்டப் பணியில் வேலை வழங்குவதாகவும், சாலை வசதி ஓரிரு மாதங்களில் செய்து தருவதாகவும், அரசின் நிதி ஒதுக்கீடு வந்த பின்பு சுற்றுச்சுவா், சாலை வசதி செய்து தருவதாகவும் கூறினாா். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

