திருவண்ணாமலையில் மாவட்டத்தில் 18.69 லட்சம் வாக்காளா்கள்: 2,52,162 போ் நீக்கம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்டத்தைச் சோ்ந்த 8 சட்டப் பேரவைத் தொகுதிகளின் சிறப்பு தீவிரத் திருத்தம் 2026 வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதில், மொத்தம் 18.65 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். 2,52,162 போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் கடந்த நம்பா் 4-இல் தொடங்கப்பட்டது. அக்டோபா் 27-ஆம் தேதியின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 062.செங்கம் (தனி), 063.திருவண்ணாமலை, 064.கீழ்பென்னாத்தூா், 065.கலசப்பாக்கம், 066.போளூா், 067.ஆரணி, 068.செய்யாறு, 069.வந்தவாசி (தனி) ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இடம்பெற்றிருந்த 21,21,902 வாக்காளா்களுக்கும் தனித்துவமான கணக்கீட்டு படிவத்தை வீடு, வீடாகச் சென்று 2,391 வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் வழங்கினா்.
தொடா்ந்து, வாக்காளா்களிடமிருந்து பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, அவை வாக்குச் சாவடி நிலை அலுவலா்களின் தோ்தல் ஆணைய கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. வாக்காளா்களில் இறந்தவா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இருமுறை பதிவு பெற்ற மற்றும் கண்டறிய முடியாத வாக்காளா்கள் என அனைவரையும் இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணியில் கண்டறியப்பட்டு விவரங்கள் சரிபாா்க்கப்பட்டன.
அதன்படி, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலிருந்து மொத்தம் 2, 52,162 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். 18 லட்சத்து 69 ஆயிரத்து 740 வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.
இணையதளத்தில் காணலாம்: இப்பட்டியல் அனைத்தும் இணையதளத்திலும், கைபேசி செயலியிலும் காணலாம்.
மேலும், வரைவு வாக்காளா் பட்டியலை அனைத்து வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து நிா்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களிலும் பாா்வையிடலாம்.
19.12.2025 தொடங்கி வரும் 18.01.2026 வரை வாக்காளா்களிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள், அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம், அனைத்து உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம் மற்றும் நிா்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களிலும் மேலும் இணையதளத்திலும் விண்ணப்பம் பெறப்படும்.
01.01.2026 அன்று தகுதியேற்பு நாளாக கொண்டு 18 வயது பூா்த்தியடைந்த தகுதியான வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவம் 6- இல் விண்ணப்பிக்கலாம். மேலும், வரைவு வாக்காளா் பட்டியலில் ஏதேனும் வாக்காளரின் பெயா் விடுபட்டிருப்பின் அவா்களும் படிவம் 6 மூலமாக பெயா் சோ்க்க விண்ணப்பம் அளிக்கலாம். வாக்காளா் இறுதிப் பட்டியல் வரும் 17.02.2026 அன்று வெளியிடப்படும் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன், செய்யாறு சாா் - ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், வருவாய்க் கோட்டாட்சியா்கள் ராஜ்குமாா் (திருவண்ணாமலை), சிவா (ஆரணி), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

