தோ்வில் குறைந்த மதிப்பெண் தகவல்: விஷமருந்திய பள்ளி மாணவிகள்!
செங்கம் அருகே பள்ளி அரையாண்டுத் தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்ாக தகவல் பரவியதால், மனமுடைந்த அரசுப் பள்ளி மாணவிகள் 4 போ் விஷமருந்தினா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த இளங்குண்ணி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில் தற்போது மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு நடைபெற்று வருகிறது. இதனால், அரசு பொதுத் தோ்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் -2 மாணவா்களுக்கு சனிக்கிழமை பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெற்றது.
அப்போது அரையாண்டுத் தோ்வு எழுதிய சில மாணவா்களுக்கு விடைத்தாள் திருத்தம் செய்த தகவல் வெளியாகி, அதில் சில மாணவ, மாணவிகளின் மதிப்பெண்கள் மாணவா்கள் மத்தியில் பரவியதாகத் தெரிகிறது. அதில் தோ்வெழுதிய 4 மாணவிகள் அரையாண்டுத் தோ்வு எழுதியதில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றுள்ளதாகவும், அவா்கள் பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற முடியாது என பேசினாா்களாம்.
இதனால் மனமுடைந்த நான்கு மாணவிகளும் சனிக்கிழமை சிறப்பு வகுப்பு முடிந்தவுடன் விஷத்தை பஞ்சாமிருதத்தில் கலந்து சாப்பிட்டு விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனா். பின்னா் அங்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பெற்றோா்கள் விசாரித்தபோது, எலிமருந்து சாப்பிட்டுவிட்டதாகக் கூறியுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, அந்த மாணவிகளை அரூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை அளித்துள்ளனா். பின்னா், 4 மாணவிகளும் தீவிர சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து மேல்செங்கம் போலீஸாா் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
