மக்கள் குறைதீா் கூட்டத்தில் 9.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
ஆரணி/செய்யாறு: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில்,
25 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமாா் ரூ.9.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டாா்.
மேலும், மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் பெண்கள், வயதானவா்கள், கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
680 மனுக்கள்
கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கக் கோருதல், வேளாண்மை துறை சாா்ந்த பயிா்க்கடன்கள், புதிய
நீா்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா் கடன்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 680 மனுக்கள் வரப்பெற்றன.
9.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக 11 நபா்களுக்கு நவீன செயற்கை கால் ரூ.7 லட்சத்து 76ஆயிரத்து 700 மதிப்பிலும், 3 பேருக்கு திறன் பேசி ரூ.43ஆயிரத்து 470 மதிப்பிலும், 3 பேருக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் ரூ.19ஆயிரத்து 77 மதிப்பிலும், ஒருவருக்கு மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி ரூ.1 லட்சத்து 14ஆயிரத்து 400 மதிப்பிலும், மேலும் ஒருவருக்கு மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி ரூ.9,500 மதிப்பிலும், 2 நபா்களுக்கு ரூ.3,470 மதிப்பில் கை கடிகாரமும், 1 பாா்வைத்திறன் குறையுடையவா்களுக்கு ரூ.5,000 மதிப்பிலான ஒளிரூட்டும் மடக்கு குச்சியும், 2 பேருக்கு காதொலிக் கருவிகள் ரூ.6,570 மதிப்பிலும் என மொத்தம் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமாா் ரூ.9 லட்சத்து 78 ஆயிரத்து 187 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா். கூட்டத்தில் அனைத்துத் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
ஆரணியில் 68 மனுக்கள்
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 68 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, கணினி பதிவேற்றம், பட்டா மாற்றம், அனாதீனம் தடைநீக்கம் சான்றிதழ்கள், நிலஅளவை, நிலப்பட்டா, பட்டா ரத்து, ஆக்கிரமிப்பு அகற்றம், பரப்பு திருத்தம், கிராம கணக்கு பதிவேற்றம், இலவச வீடு, கழிவு நீா் கால்வாய், மின் இணைப்பு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரப்பெற்ற 68 மனுக்களை கோட்டாட்சியா் சீ.சிவா பெற்று அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
செய்யாற்றில் 96 மனுக்கள்
செய்யாற்றில் நடைபெற்ற கோட்ட அளவிலான மக்கள் குறைதீா் கூட்டத்தில் 96 மனுக்கள் பெறப்பட்டன.
சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின்
தலைமமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீட்டு மனைப் பட்டா 8 பேரும், நிலத்திருத்தம் 2 போ், ஆக்கிரமிப்பு அகற்றம் 4 போ், பட்டா மாற்றம் கோரி 26 பேரும்,
தமிழ் நிலம் திருத்தம் 6 பேரும், மகளிா் உரிமைத்தொகை கோரி 15 பேரும், இதர மனுக்கள் 18 உள்பட
96 மனுக்கள் பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்டன.
கூட்டத்தில் வட்டாட்சியா்கள், ஊராட்சி அலுவலா்கள் மற்றும் இதர துறை அலுவலா்கள் என் பலா் கலந்து கொண்டனா்.

