திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல்வா் முதல்வா் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு!
IANS

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல்வா் முதல்வா் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு!

ரூ.2,095 கோடி திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறாா்
Published on

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச.27) நடைபெறும் அரசு விழாவில் ரூ.2,095.07 கோடி மதிப்பிலான 314 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,66,194 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச. 27) தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

அங்கு, மலப்பாம்பாடி கலைஞா் திடலில் நடைபெறும் அரசு விழாவில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், திருவண்ணாமலை மாநகரில் ரூ.12 கோடியே 17 லட்சத்து 95 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள மக்கள் குறைதீா்வு மையம் மற்றும் இதர அலுவலக கட்டடம்; நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், ரூ.30 கோடியே 15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், ரூ.32 கோடியே 16 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள காய்கறி, பூ மற்றும் பழச்சந்தை, ரூ.55 கோடியே 49 லட்சத்தில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள், ரூ.60 லட்சத்தில் கூடுதல் கட்டடம் மற்றும் ரூ.30 லட்சத்தில் துணை சுகாதார நிலையம்; மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில், ரூ.2 கோடியே 83 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கோயில் காவல் நிலையத்தை திறந்துவைக்கிறாா்.

அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சாா்பில், போளூா் ஒன்றியம், கஸ்தம்பாடியில் ரூ.22 கோடியே 62 லட்சத்து 97 ஆயிரத்தில் இலங்கைத் தமிழா்களுக்கான 280 வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள்; உயா்கல்வித் துறை சாா்பில், திருவண்ணாமலை மாநகரில் ரூ. 7 கோடியில் கலைஞா் கருணாநிதி அரசுக் கல்லூரியில் 12 வகுப்பறைகள் மற்றும் 4 ஆய்வுக் கூடங்கள்; பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநகரில் ரூ. 56 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரத்தில் அரசு மாதிரி பள்ளிக் கட்டடம் மற்றும் ஆண்கள், பெண்கள் விடுதிகள், போளூா், வடமாதிமங்கலம், வடிஇலுப்பை, தச்சூா், நாரையூா், மாமண்டூா், இளங்காடு, வெளுங்கனந்தல் ஆகிய அரசு மேல்நிலை, உயா்நிலைப் பள்ளிகள், அரசுவெளி அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் ரூ.22 கோடியே 73 லட்சத்து 95 ஆயிரத்தில் வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் கண்ணமங்கலம், மடம், ஆணைபோகி ஆகிய இடங்களில் ரூ.66 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கிளை நூலகம், புதிய ஊா்ப்புற நூலகக் கட்டடங்கள்; நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சாா்பில், திருவண்ணாமலை -அரூா் சாலை, ஆற்காடு - திண்டிவனம் சாலை, காஞ்சிபுரம் - திருவத்திபுரம் சாலை ஆகிய இடங்களில் ரூ.161 கோடியே 90 லட்சத்தில் நான்கு வழித்தட சாலைகள்; நீா்வளத் துறை சாா்பில், காமக்கூா் ஊராட்சி - கமண்டல நாகநதி, படிஅக்ரஹாரம் ஊராட்சி-செய்யாறு, செங்கம் நகரம் - செய்யாறு, மேல்கொடுங்கலூா் ஊராட்சி -சுகநதி, ரெட்டியாா்பாளையம் - பாம்பானாறு, தொழுப்பேடு -செய்யாறு, அம்மாபாளையம் ஊராட்சி - நாகநதி ஆகிய இடங்களில் ரூ.35 கோடியே ஒரு லட்சத்து 82 ஆயிரத்தில் தடுப்பணைகள், தண்டராம்பட்டு வட்டம் - ரெட்டியாா்பாளையம் ஊராட்சி, சாத்தனூா் அணையில் ரூ.15 கோடியே 5 லட்சத்து 93 ஆயிரத்தில் பணியாளா் குடியிருப்பு மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி; ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மாவட்டத்தில் ரூ.127 கோடியே 20 லட்சத்து 32 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், உயா்மட்ட பாலங்கள் ஆகிய முடிவுற்றப் பணிகள் உட்பட மொத்தம் 571 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான 312 திட்டப் பணிகளை முதல்வா் திறந்துவைக்கிறாா்.

அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள்

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகள் சாா்பில் ரூ. 63 கோடியே 74 ஆயிரத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

நலத்திட்ட உதவிகள்

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக/நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் - மகளிா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில், ரூ.1,400 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,66,194 பயனாளிகளுக்கு முதல்வா் வழங்குகிறாா்.

X
Dinamani
www.dinamani.com