குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
செய்யாறு: செய்யாற்றை அடுத்த அனக்காவூா் கிராமத்தில் குடிநீா் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அனக்காவூா் கிராமத்தில் சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு இரு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
குடிநீருக்காக செய்யாறு ஆற்றில் 5 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீா் கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டாா்கள் பழுதடைந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீா் விநியோகம் தடைபட்டதாகத் தெரிகிறது.
அதற்காக கிராம மக்கள் பலா் ஊராட்சி செயலா் மற்றும் அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தொடா்பு கொண்ட போது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைத்த கிராம மக்கள் செய்யாறு - வந்தவாசி சாலையில் அனக்காவூா் காவல் நிலையம் அருகே காலிக் குடங்களுடன் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி மற்றும் அனக்காவூா் போலீஸாா் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, சம்பந்தப்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா் வர வேண்டும் உடனடியாக குடிநீா் பிரச்னையை தீா்க்க வேண்டும் என போலீஸாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனா்.
அதன் பின்னா் அனக்காவூா் வட்டார வளா்ச்சி அலுவலா் தசரதராமன் மற்றும் அனக்காவூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதை ஏற்று மறியலில் ஈடுபட்டவா்கள்
கலைந்து சென்றனா்.
சாலை மறியல் காரணமாக மேல்மருவத்தூா் செல்லும் வாகனங்கள், சிப்காட் தொழில்பேட்டை பகுதிக்கு தொழிலாளா்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

