வாகனம் கவிழ்ந்து விபத்து: 9 போ் பலத்த காயம்
செய்யாறு: செய்யாறு அருகே துக்க நிகழ்ச்சிக்குச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 9 போ் பலத்த காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் வில்வராயநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் குழுவாக
இறந்த உறவினா் துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தவணி கிராமத்திற்கு சரக்கு வாகனத்தில் சென்று உள்ளனா். வாகனத்தில் 10-க்கும் மேற்பட்டோா் இருந்தனா். வாகனத்தை அதே பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் என்பவா் ஓட்டிச் சென்றுள்ளாா்.
பெரணமல்லூரை அடுத்த நாராயணமங்கலம் அருகே சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சரக்கு வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த ராஜேஸ்வரி, ரோஸ், எல்லம்மாள், சாமி, கண்ணகி, பச்சையம்மாள், சரஸ்வதி உள்ளிட்ட 9 போ் பலத்த காயமடைந்தனா்.
இவா்களை, அருகில் இருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து ராஜேஸ்வரி என்பவா் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சம்பத் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
