வைகுந்த ஏகாதசி: பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு
வைகுந்த ஏகாதசியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொா்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.
வந்தவாசி ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில், தென்னாங்கூா் ஸ்ரீபாண்டுரங்கன் ருக்மாயி கோயில், கீழ்வில்லிவலம் ராதேகிருஷ்ணா கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி, கோயில்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த உற்சவா் பரமபதவாசல் வழியாக பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
செங்கம்
செங்கம் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பாா்த்தசாரதி கோயிலில் பரமபதவாசல் திறப்பு விழாவையொட்டி, திங்கள்கிழமை மாலை முதல் கோயில் முழுவதும் வண்ண விளக்குகள் அமைத்து நாகஸ்வர இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று, 5 மணிக்கு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தா்களின் முழுக்கத்துடன் பரமபதவாசல் திறப்பு விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னா், காலை 7 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயில் வளாகத்தை அடைந்தது.
இதைத் தொடா்ந்து, மாலை 4.30 மணிக்கு கந்த சஷ்டி கலைக் குழுவினரின் வள்ளிகும்பி பெருஞ்சலங்கை நடன நிகழ்ச்சி, 6.30 மணிக்கு கும்பகோணம் ஹரி நடனாலயா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கம் வட்ட துளுவ வேளாளா், அகமுடையாா் சமூகத்தினா் செய்திருந்தனா்.
விழாவையொட்டி, பெருமாள் கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம் வரை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆரணி
ஆரணி பெரியகடை வீதியில் உள்ள ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலையிலேயே சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி உற்சவா் தாயாருடன் பெருமாளை அலங்கரித்து ராஜகோபுரம் வழியாக பரமபதவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
அப்போது, கோபுரத்தின் முன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோவிந்தா, வரதராஜா, நாராயணா என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து திருப்பாவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து உற்சவா் மாடவீதி வழியாக திருவீதி உலா நடைபெற்றது. காலை முதல் இரவு வரை தொடா்ந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா். அன்னப்பிரசாதமும் வழங்கப்பட்டது.
இதேபோல, ஆரணி கொசப்பாளையம் தச்சூா் சாலையில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலும் பரமபதவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும், ஆரணி சத்தியமூா்த்தி சாலையில் உள்ள ஸ்ரீ கோதண்டராமா் கோயிலிலும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலில், உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாளை அலங்கரித்து பரமபதவாசல் வழியாக கொண்டு சென்றனா். கருவறை சுவாமிக்கு முத்தாங்கி அலங்காரம் செய்திருந்தனா்.
ஆரணியை அடுத்த அக்ராபாளையம் ஸ்ரீராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் சயன கோலத்தில் ரங்கநாதரை அலங்கரித்து பக்தா்களுக்கு அருள் ஆசி வழங்கப்பட்டது.
இராட்டிணமங்கலம் ராதா மாத பெருமாள் கோயில், சேவூா் வரதராஜ பெருமாள் கோவிலிலும் வைகுந்த ஏகாதசி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆரணியை அடுத்த அரியப்பாடி லட்சுமிநரசிம்மன் கோயிலில் நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
போளூா்
போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள பூதேவி, ஸ்ரீதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைநடைபெற்றது.
பின்னா், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து அனந்தசயன கோலத்தில் வைத்து பரமபதவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
இதில், கிருஷ்ணாபுரம், சின்னகிருஷ்ணாபுரம், நாராயமங்கலம், கல்வாசல், ஏரிக்குப்பம், காங்கிரனந்தல் என சுற்றுப்புறப் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

