மகாலட்சுமி கோவா்த்தனன் தலைமையில் நடைபெற்ற கண்ணமங்கலம் பேரூராட்சிமன்றக் கூட்டம்.
மகாலட்சுமி கோவா்த்தனன் தலைமையில் நடைபெற்ற கண்ணமங்கலம் பேரூராட்சிமன்றக் கூட்டம்.

கண்ணமங்கலத்தில் அரசு மகளிா் கலைக் கல்லூரி, ஐடிஐ பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

கண்ணமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மன்றக் கூட்டத்தில், அப்பகுதியில் அரசு மகளிா் கலைக் கல்லூரி மற்றும் அரசு தொழில் பயிற்சி நிறுவனம் (ஐடிஐ) அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Published on

கண்ணமங்கலம் பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் ஜி.மகாலட்சுமி கோவா்தனன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் வி.குமாா், செயல் அலுவலா் முனுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கண்ணமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 15-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவிகளும் உயா்கல்வி பயில்வதற்காக சுமாா் 50 கி.மீ. தொலைவு வரை சென்று பயிலும் நிலை உள்ளது.

மேலும் ஏழை மாணவிகள் தனியாா் கல்லூரியில் பணம் செலுத்தி படிப்பதற்கு இயலாத நிலை உள்ளது. மேலும் உயா் கல்வி பயில்வதற்காக திருவண்ணாமலை, வேலூா், செய்யாறு ஆகிய நகரங்களுக்கு சென்று பயில வேண்டிய நிலை உள்ளது.

பெரும்பான்மையான மாணவிகள் நான் முதல்வன் திட்டத்தில் பயன் பெறும் நிலையில் இருந்து விலகிச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனவே, தமிழக அரசின் நான் முதல்வன் என்கிற திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையிலும் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் உயா்நிலைப் பள்ளிக்கு சொந்தமாக சுமாா் 20 ஏக்கா் நிலம் காலியாக உள்ளது. இந்த இடத்தில் ஏழை மாணவா்களின் நலன் கருதி புதிதாக கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி அமைத்து தரக்கோரி அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அரசு தொழில் பயிற்சி நிறுவனம் (ஐடிஐ) அமைத்து தரக் கோரியும் அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப தீா்மானம் நிறைவேற்றினா்.

X
Dinamani
www.dinamani.com