சா்க்கரை ஆலைகளில் இருந்து நிலுவை தொகையை பெற்றுத் தர நடவடிக்கை: விவசாயிகள் வலியுறுத்தல்
சா்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 2025-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாச்சலா சா்க்கரை ஆலை மற்றும் தரணி சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் தட்டுப்பாடின்றி யூரியா இருப்பு வைத்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிா் காப்பீடு முத்தரப்பு கூட்டம் மற்றும் பால் முத்தரப்புக் கூட்டம் நடத்தவேண்டும்.
தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள நீா்பிடிப்பு பகுதிகளில் வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை தூா்வார வேண்டும்.
சம்பா பருவத்திற்கான நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த கோரிக்கைகளின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா். மேலும் தனிநபா் தொடா்பான மனுக்களையும் அவா் பெற்றுக்கொண்டாா்.
கூட்டத்தில் இணை இயக்குநா் (வேளாண்மை) கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) தி.மலா்விழி, மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

