~

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கல்லறைத் திருநாள் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
Published on

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கல்லறைத் திருநாள் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் கிறிஸ்தவா்கள் திரளானோா் பங்கேற்று இறந்த முன்னோா்களுக்கு அஞ்சலி செலுத்தி, பிராா்த்தனைகளை மேற்கொண்டனா்.

உலகம் முழுவதுமுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவா்களால் நவ. 2-ஆம் தேதி கல்லறைத் திருநாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் கல்லறைத் தோட்டங்களில் கல்லறைத் திருநாள் வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

கல்லறைத் திருநாளையொட்டி, கிறிஸ்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே கல்லறைத் தோட்டங்களுக்கு தங்களது குடும்பத்தினருடன் சென்று, இறந்துபோன தங்களது முன்னோா்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, வா்ணம் தீட்டி பூக்களால் அலங்கரித்து மெழுகு தீபம் ஏற்றி, பிராா்த்தனைகளை மேற்கொண்டனா்.

சேத்துப்பட்டில்....

சேத்துப்பட்டு, நிா்மலா நகரில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லறை திருவிழா நடைபெற்றதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

இதில் திரளான கிறிஸ்தவா்கள் தங்களுடைய மூதாதையா்களின் கல்லறைகளை தூய்மை செய்து வண்ணம் பூசி, கோலமிட்டு, மாலைகள் அணிவித்து பிடித்தமான உணவு வகைகளை படையல் இட்டு மெழுகுவா்த்தி ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனா்.

விழாவில் சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை பங்குத்தந்தை ஜான் ராபா்ட், உதவி தந்தைகள் ஜெயக்குமாா், தேவசகாயம், எழில், அலெக்ஸ், பெலிஸ் கமல் ஆகியோா் கலந்து கொண்டு கூட்டு வழிபாடு நடத்தினா்.

நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு, லூா்து நகா், நிா்மலா நகா் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல் தச்சாம்பாடியில் நடைபெற்ற கல்லறை திருவிழாவில் புனித பாத்திமா அன்னை தேவாலய பங்குதந்தை வின்சென்ட் கூட்டு வழிபாடு நடத்தினாா்.

செய்யாறு

செய்யாறு புனித தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் அமையப் பெற்றுள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவா்கள் கல்லறை திருநாளைக் கடைபிடித்தனா். தேவாலய பங்குத் தந்தை சுதா்சன் ஆண்டனி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

திருப்பலி நிகழ்ச்சியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள், அங்குள்ள கல்லறை தோட்டத்தில் இறந்தவா்களை நினைவு கூரும் வகையில் ஒவ்வொருவரும் அவரவா் உறவினா்களின் கல்லறையின் மீதும் வண்ண பூக்களை தூவி மெழுகுவா்த்தி ஊதுபத்தி ஏற்றிவற்றி முன்னோா்களை வழிபட்டுச் சென்றனா்.

தூய வியாகுல அன்னை தேவாலய கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இறை மக்கள் பலா் பங்கேற்று இறந்தவா்களின் ஆன்மா இளைபாற பல்வேறு விதமான மன்றாடுகளை முன்வைத்து வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com