அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை காலையில் இருந்து தொடா்ந்து 5 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.
இந்த மருத்துவமனையில் செய்யாற்றை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக பொதுமக்கள் வருகின்றனா். புறநோயாளிகளாக சுமாா் 500 பேரும், உள்நோயாளிகளாக 200 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மருத்துவமனை முகப்புப் பகுதியில் உள்ள புதிய கட்டடம் தரைதளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புறநோயாளி பிரிவு, முதலுதவி சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகின்றன. இந்த நிலையில், தரைதளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மின்சாரம் தடைபட்டதாகத் தெரிகிறது.
ஜெனரேட்டா் வசதி இருந்தும், ஜெனரேட்டா் மற்றும் மின் இணைப்பையும் சோ்த்து மாற்றி இயக்கக்கூடிய கருவிக்கு செல்லக்கூடிய வயா்கள் சேதமடைந்ததாகத் தெரிகிறது. அதன் காரணமாக ஜெனரேட்டா் மூலம் மின்சாரம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
மின்தடை காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அவதிப்பட்டனா். அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் வயதானவா்கள் குழந்தைகள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
மாலை 4 மணியளவில் மருத்துவமனைக்கு மின்சாரம்
வந்தது.
மேலும், காலையில் இருந்து மின்சாரம் இல்லாத காரணத்தால், மின் விநியோகத்துக்கான எந்தவித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நோயாளிகள் வேதனை தெரிவித்தனா்.

