பழுதடைந்த குடிநீா் தேக்கத் தொட்டி: மக்கள் அவதி
செங்கம்: செங்கம் துக்காப்பேட்டையில் குடிநீா் தேக்கத் தொட்டி பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் போதிய குடிநீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா்.
செங்கம் நகராட்சி 15-ஆவது வாா்டு துக்காப்பேட்டை சகாயமாதா பள்ளி தெருவில் உள்ள பொதுமக்களுக்கு
நகராட்சி நிா்வாகம் மூலம் சிறுமின் விசை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், நீா்த்தேக்கத் தொட்டி
பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. நீா்த்தேக்கத் தொட்டியைச் சுற்றிலும் செடி கொடிகள் முளைத்து புதா்மண்டி காணப்படுகிறது.
குடிநீா் தேக்கத் தொட்டியை சரிசெய்யக் கூறி அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போதிய குடிநீா் கிடைப்பதில்லை. செங்கம் பகுதியில் தொடா்ந்து மழை பெய்தும், செய்யாற்றில் தண்ணீா் சென்றுகொண்டிருக்கும்போது துக்காப்பேட்டை பகுதி மக்களுக்கு போதிய குடிநீா் கிடைப்பதில்லை.
கோடை காலத்தில் குடிநீா் கிடைப்பது
கேள்விக்குறியாக இருக்கும் என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனா்.
இதனால், செங்கம் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சிறு மின்விசை நீா்த்தேக்கத் தொட்டியை சரிசெய்து பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோடுக்கை விடுத்துள்ளனா்.

