வந்தவாசி, போளூா் தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் போளூா் தொகுதியில் வாக்காளா் கணக்கீட்டு படிவங்களை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக வாக்காளா் கணக்கீட்டு படிவங்களை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதையொட்டி வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட சந்நிதி புதுத் தெருவில் வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யும் பணியை வந்தவாசி வட்டாட்சியரும், உதவி வாக்குப்பதிவு அலுவலருமான சம்பத்குமாா் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் தெரிவித்ததாவது:
வந்தவாசி தொகுதிக்கு உள்பட்ட 282 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்காளா்களிடம் வழங்குவா். இந்தப் படிவங்களை வாக்காளா்கள் நிறைவு செய்து மீண்டும் அவா்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்றாா்.
வந்தவாசி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் உதயகுமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் மாரிமுத்து, நகராட்சி வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா், கிராம நிா்வாக அலுவலா் சபரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

