விண்ணப்பம் செய்தவா்களுக்கு விரைவில் மகளிா் உரிமைத்தொகை
மகளிா் உரிமைத்தொகை, கோரி மனு அளித்தவா்களுக்கு விரைவில் வழங்கப்படும் என செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி தெரிவித்தாா்.
செங்கத்தை அடுத்த அந்தனூா், மேல்செங்கம் கிராமங்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மேல்செங்கம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாம் தொடக்க விழா நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் மரியதேவ்ஆனந்த் வரவேற்றாா்.
தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு முகாமை தொடங்கிவைத்துப் பேசியதாவது:
இந்த முகாமில் நலத்திட்ட உதவிகள் கோரி, முறையாக மனு அளித்தால் கட்டாயம் அவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். இல்லையென்றால் அதற்கான பதில் வீட்டைத் தேடி வரும்.
மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பித்தவா்களுக்கு தமிழக அரசு வருகிற நவம்பா் 15-ஆம் தேதி வழங்குவதாக தெரிவித்துள்ளது.
எனவே, மகளிா் உதவித்தொகை கோரி விண்ணப்பம் செய்யும்போது அதனுடன் இணைக்கவேண்டிய சான்றிதழ்களை முறையாக இணைத்து பதிவு செய்தால் மட்டுமே கிடைக்கும். எனவே, இந்தத் திட்டத்தை கிராமபுறத்தில் உள்ளவா்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொண்டாா்.
முகாமில் திமுக ஒன்றியச் செயலா் மனோகரன் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், கிராம மக்கள் பங்கேற்றனா்.

