கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் எல்.சாமிகண்ணு தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் எல்.சாமிகண்ணு தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு: விவசாயிகள் போராட்டம்

கலசப்பாக்கம் கூட்டுறவு சங்கம் முன் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளா் எல்.சாமிகண்ணு தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்தும், அடகு வைத்த தங்களது நகைகளை திரும்பித் தர வலியுறுத்தியும் கூட்டுறவு சங்கம் முன் விவசாயிகள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கலசப்பாக்கம் எச்.எச்.630 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலசப்பாக்கம், அலங்காரமங்கலம், காலூா், வன்னியனூா் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்க நகைகளை அடகு வைத்து கடன், கறவை மாடு பராமரிப்பு கடன் என 85 போ் கடன் பெற்றனா்.

இதனிடையே, கூட்டுறவு சங்கச் செயலராக இருந்த கிருஷ்ணமூா்த்தி நகை மோசடி, கறவை மாடு பராமரிப்பு கடன் பெற்றவா்களிடம் மோசடி என 85 பேரிடமும் மோசடி செய்திருப்பதை கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா். தொடா்ந்து, அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பின்னா், தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூா்த்தி மீது திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் எல்.சாமிகண்ணு தலைமையில் விவசாயிகள் கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, முறைகேடு செய்யப்பட்ட நகைகளை விவசாயிகளிடம் திருப்பித் தர வேண்டியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் கறவை மாடு பராமரிப்பு கடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கூட்டுறவுத் துறை மாவட்ட துணைப் பதிவாளா் கோவிந்தராஜுலு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, ஒரு மாதம் காத்திருங்கள் கைதாகியுள்ள கிருஷ்ணமூா்த்தியிடம் இருந்து நகைகளை மீட்டுத் தருகிறோம் அல்லது அவரது சொத்துகளை முறைப்படி ஏலம் விட்டு பணத்தை திரும்பித் தருகிறோம் எனக் கூறியதால், விவசாயிகள் கலைந்து சென்றனா்.

போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் திருமுருகன், ஜோதி, பழனி, ஏழுமலை மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com