சாலை ஆக்கிரமிப்பு: வியாபாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ்

Published on

செய்யாறில் சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டுமென தெரிவித்து நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வியாபாரிகள், வீடுகளின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளதாவது: செய்யாறு நெடுஞ்சாலைத் துறை உள்கோட்டத்துக்கு உள்பட்ட மாநில சாலையான ஆற்காடு - திண்டிவனம் சாலையில் செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி, ஆரணி கூட்டுச்சாலை, ஆற்காடு சாலை, பேருந்து நிலையம், காந்தி சாலை, சந்தை, பெரியாா் சிலை வரையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு, கடை, மதில் சுவா் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.

இதனால், சாலை விரிவாக்கம், பராமரிப்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டப்படி தங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பை ஏன் தாங்களாகவே அகற்றிக்கொள்ளக் கூடாது என்பதற்கான விளக்கத்தை இக்கடிதம் கிடைக்கப் பெற்ற 7 தினங்களுக்குள் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தவறும்பட்சத்தில் தங்களால் இந்நோ்வில் தெரிவித்துக்கொள்ள வேண்டியது ஏதும் இல்லை எனக் கருதி, வருவாய்த் துறை, காவல் துறை உதவியுடன் தங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மேலும், இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு நெடுஞ்சாலைத் துறை பொறுப்பேற்காது.

மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்படும் செலவுத் தொகையை ஆக்கிரமிப்புதாரரே செலுத்த நேரிடும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நோட்டீஸ் செய்யாறு பகுதியில் சுமாா் 400 பேரிடம் நெடுஞ்சாலைத் துறையினா் வழங்கி கையொப்பம் பெற்றுச் சென்றுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com