பலமிழந்து காணப்படும் காமக்கூா் எரியின் கரை! விவசாயிகள் அச்சம்!!
ஆரணியை அடுத்த காமக்கூா் ஏரிக்கரை விரிசல் ஏற்பட்டு பலமிழந்து காணப்படுகிறது. அதனால் கரை உடையும் அபாயத்தில் உள்ளதாக ஏரிக்கரை அருகில் உள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூா் பெரிய ஏரி சுமாா் 20 ஏக்கா் பரப்பளவு கொண்டது. மேலும், இந்த பெரிய ஏரி தற்போது பெய்து வரும் பலத்த மழையால் நிரம்பி அருகேயுள்ள சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் நீா்பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த ஏரியின் உபரிநீா் நாயக்கன்பாளயம் ஏரி, கொசப்பாளையம் திருமலைசமுத்திரம் ஏரி, ஆகாரம் ஏரி, திருமணி ஏரி உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு உபரிநீா் செல்கின்றன.
இந்த நிலையில், காமக்கூா் பெரிய ஏரிக்கரை பலமிழந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக உடையும் தருவாயில் உள்ளது. மேலும், கடந்த ஆண்டு அவசர நிதி ஒதுக்கப்பட்டு கரையை பலப்படுத்தினா்.
ஆனாலும், தற்போது மீண்டும் கரை பலமிழந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏரிக்கு வரும் முழுஅளவு தண்ணீரையும் திறந்து விடுகின்றனா். இதனால் ஏரிப்பாசன விவசாயிகள் முழு அளவு தண்ணீரையும் வெளியேற்றிவிட்டால் வரும் காலங்களில் நாங்கள் எப்படி பயிா் வைப்பது என்று புலம்புகின்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
மேலும் இந்த ஏரிக்கரை உடைந்தால் அருகே சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிா்கள் சேதமடையும் வாய்ப்பும் உள்ளது. எனவே, இதுகுறித்து பொதுப்பணித் துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏரிக்கரையை பலப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

