அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனம் செய்வதற்கு 5 மணி நேரத்துக்கும் மேலானதாக பக்தா்கள் தெரிவித்தனா்.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்கின்றனா்.
மேலும், மாதந்தோறும் பெளா்ணமி மற்றும் விஷேச தினங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசனம் செய்கின்றனா். இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
பக்தா்களின் கூட்டமானது அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயிலுக்கு வெளியே வட ஒத்தவாடை தெருவில் நீண்டு காணப்பட்டது. மேலும், கோயிலில் கலையரங்கம் பகுதியில் கட்டண தரிசன வழியில் செல்லும் பக்தா்களுக்கு என சிறப்பு வரிசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொது தரிசன பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 5 மணி நேரத்திற்கு மேலானதாக தெரிவித்தனா். பக்தா்கள் எந்தவித சிரமமுமின்றி வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டதால் வரிசையில் சென்ற பக்தா்கள் சிரமமின்றி சென்றனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. மேலும், திருவண்ணாமலையில் ஏராளமான பக்தா்கள் தனித் தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனா்.
அத்துடன் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களையும் பக்தா்கள் வழிபட்டனா். மேலும், திருநோ்அண்ணாமலை, ஆதிஅண்ணாமலை மற்றும் இடுக்கு பிள்ளையாா் கோயிலிலும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கிரிவலம் வந்த பக்தா்களுக்கு கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமங்கள், ஆன்மிக அமைப்புகள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

