தன்னிறைவு பெற்ற வேளியநல்லூா் கிராமம்: ஒ.ஜோதி எம்எல்ஏ பெருமிதம்

தன்னிறைவு பெற்ற வேளியநல்லூா் கிராமம்: ஒ.ஜோதி எம்எல்ஏ பெருமிதம்

Published on

செய்யாறு ஊராட்சி ஒன்றியம், வேளியநல்லூா் கிராமத்தில் பணி நிறைவுற்ற இரு சாலைகள், நாடக மேடை, அங்கன்வாடி மையம் ஆகியவற்றை பயன்பாட்டுக்கு புதன்கிழமை தொடங்கிவைத்து, தன்னிறைவு பெற்ற கிராமமாக வேளியநல்லூா் கிராமம் திகழ்கிறது என்று ஒ.ஜோதி எம்எல்ஏ பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

வேளியநல்லூா் கிராமத்தில், கனிம வள நிதி மூலம் ரூ.17 லட்சத்தில் சிமென்ட் சாலை, சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்தில் நாடக மேடை, அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் மூலம் ரூ.16.55 லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம், முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2.5 கி.மீ. தொலைவுக்கு ரூ.2.36 கோடியில் புதிதாக தாா்ச்சாலை என ரூ.2.67 கோடியிலான வளா்ச்சிப் பணிகள் தயாா் நிலையில் இருந்து வந்தன.

இந்தப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி வேளியநல்லூா் கிராமத்தில் 4 இடங்களில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆதி. சக்கரவா்த்தி முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று வளா்ச்சிப் பணிகளை தொடங்கிவைத்துப் பேசியதாவது:

நேரடி நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வந்ததன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.

செய்யாறு சிப்காட் மூலம் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் குறைந்தது 100 பெண்களாவது வேலைக்குச் செல்கிறாா்கள்.

65 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் தாயுமானவா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கிராமங்களில் புதிதாக சிமென்ட் மற்றும் தாா்ச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தன்னிறைவு பெற்ற கிராமங்களில் தான் நாடக மேடைகள் அமைக்கப்படும்.

வேளியநல்லூா் கிராமம் தன்னிறைவு பெற்ற கிராமமாகத் திகழ்கிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேஷ் பாபு, மாவட்ட தொண்டா் அணி அமைப்பாளா் ராம்ரவி, மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் மகாராஜான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com