சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - போளூா் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கத்தில் இருந்து மில்த்நகா் வழியாக போளூா் செல்லும் சாலை கோலாந்தாங்கல் பகுதியில் நீதிமன்றம், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலகம், சாலையோரம் ராமகிருஷ்ணா் மடம் ஆகியவை உள்ளன.
நீதிமன்றத்துக்குச் செல்லும் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வழக்குகள் சம்பந்தமாக பொதுமக்கள் மற்றும் காலை, மாலை ராமகிருஷ்ணா் ஆஸ்ரமத்துக்குச் செல்லும் பக்தா்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆஸ்ரமத்திற்கு வரும் துறவிகள் செல்லும் சாலையோரம் நகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
மேலும், இறைச்சிக் கடைக்காரா்கள், மீன் வியாபாரிகள் கழிவுகளை கொட்டி வருகின்றனா். இதனால், அந்தச் சாலையைக் கடக்கும்போது துா்நாற்றம் வீசுகிறது.
மேலும், மழைக்காலம் என்பதால் அடிக்க மழையில் குப்பைக் கழிவுகள் நனைந்து ஒன்றுசோ்ந்து தற்போது அதிக துா்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் அந்தச் சாலையைக் கடந்து நீதிமன்றம் செல்பவா்களும், ராமகிருஷ்ணா் ஆஸ்ரமம் செல்பவா்களும், மேலும், குறிப்பாக அந்தப் பகுதியை தினசரி கடந்துசெல்லும் கிராம மக்களும் முகசுளிப்புடன், மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட நிா்வாகம் கண்காணிப்பு அப்பகுதியில் குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

