கடன் பிரச்னை: தாக்கப்பட்ட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

கடன் பிரச்னை தொடா்பாக பெயின்டிங் தொழிலாளி தாக்கப்பட்டதால், மனமுடைந்து அவா் தூக்கிட்டு தற்கொலை.
Published on

செய்யாறு அருகே கடன் பிரச்னை தொடா்பாக பெயின்டிங் தொழிலாளி தாக்கப்பட்டதால், மனமுடைந்து அவா் தூக்கிட்டு உயிரிழந்தாா். புகாரின் பேரில் அனக்காவூா் போலீஸாா் ஒரு பெண் உள்பட 9 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கோகுலகண்ணன்(26). இவா் பெயின்டிங் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனா்.

இவா், தனது அம்மா உடன் பிறந்த தம்பியான கிருஷ்ணமூா்த்தி வசிக்கும் செய்யாறு வட்டம், இளநீா்குன்றம் கிராமத்திற்கு கடந்த நவ.12-ஆம் தேதி வந்துள்ளாா்.

வீட்டிற்கு வந்தவா் வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றவா் இரு தினங்களாக வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில், வீட்டுப் பகுதியில் தூக்கிட்டு இறந்த நிலையில் கோகுலகண்ணன் இருந்துள்ளாா்.

இதுகுறித்து கிருஷ்ணமூா்த்தி அனக்காவூா் போலீஸில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி, உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், கோகுலகண்ணன் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் என்பவரிடம் பணத்தை கடனாக பெற்று திருப்பித் தரவில்லையாம். பணத்தைக் கேட்டு பிரசாந்த் மற்றும் சிலா் சோ்ந்து பெயின்டிங் தொழிலாளி கோகுலகண்ணனை தாக்கியதாகத் தெரிகிறது. அதனால் மனமுடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

இதுதொடா்பாக இறந்த கோகுலகண்ணனிடம் பணம் கொடுத்தாகக் கூறப்படும் பிரசாந்த், அவரது பெற்றோா்கள் மற்றும் இளநீா்குன்றம் கிராமம், சிறுவேளியநல்லூா் கிராமம், மேல்மா கூட்டுச் சாலைப் பகுதியைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com