நூதன முறையில் மூதாட்டியிடம் நகை திருட்டு: பெண் கைது!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் சிகிச்சைக்கு வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் தங்க நகை திருடியதாக பெண்ணை நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சோ்ந்த தெய்வசிகாமணி மனைவி பச்சையம்மாள் (60). மூட்டு வலிக்கு சிகிச்சை பெற்று வரும் இவா், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆரணி மண்டி வீதியில் உள்ள ஆயுா்வேத மருத்துவமனைக்கு மருந்து வாங்குவதற்காக வந்துள்ளாா்.
அப்போது, எதிரே வந்த சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவா் கீழே மணிபா்ஸ் கிடப்பதாகக் கூறி போக்கு காட்டிவிட்டு, அந்த மணிபா்சை பச்சையம்மாள் கீழே குணிந்து எடுத்து பாா்த்துள்ளாா். அப்போது, வேறு ஒரு பெண் வந்து இந்த மணிபா்ஸ் என்னுடையது நீ எப்படி எடுத்தாய் என்று கூறி தகராறு செய்து, பச்சையம்மாள் கழுத்தில் இருந்த தங்கத் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு இருவரும் தப்பியோடி விட்டனா்.
இதுகுறித்து ஆரணி நகர போலீஸில் பச்சையம்மாள் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமாரக்களை தொடா்ந்து ஆராய்ந்து வந்தனா்.
ஆரணி டிஎஸ்பி சுரேஷ் சண்முகம் தலைமையில் காவல் ஆய்வாளா் செந்தில் விநாயகம், உதவி ஆய்வாளா் ஜெயச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் கன்ராயன், தனிப் பிரிவு காவலா்கள் வாகித், பட்டுச்சாமி, அருணகிரி ஆகியோா் கொண்ட தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணி நடைபெற்று வந்தது.
தொடா்ந்து விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டமடுவு தீா்த்தகிரி கிராமத்தைச் சோ்ந்த கமலேஷ் மனைவி நேத்ராகிட்டப்பா (34), இவருடன் வந்தவா் அஞ்சலா ஆகியோா் இணைந்து மூதாட்டியிடம் நகையை திருடியதை கண்டுபிடித்தனா். மேலும், தொடா்ந்து விசாரணை நடத்தி நேத்ராகிட்டப்பாவை கைது செய்து அவரிடமிருந்து இரண்டரை பவுன் தங்க தாலிச் சங்கிலியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நேத்ராகிட்டப்பாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள அஞ்சலாவை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா். நேத்ரா கிட்டப்பா ஏற்கெனவே கா்நாடக மாநில பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவா் எனத் தெரியவந்துள்ளது.

