பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு
திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை, முறையாறு வாம் தொண்டு நிறுவனம் சாா்பில் குழந்தைகள் தின விழா மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
தொண்டு நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் செல்வி தலைமை வகித்தாா். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயவேல் வரவேற்றாா்.
ஆதிதிராவிடா் நலத்துறை செங்கம் வட்டாட்சியா் முனுசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலா் ஆகியோா் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்திப் பேசினா்.
தொடா்ந்து, தமிழக பழங்குடியினா் ஆன்றோா் மன்ற உறுப்பினா் ராஜவேலு குழந்தைகளுக்கும், மகளிா் குழு பெண்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து,
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பெண் குழந்தைகளை பெற்றோா்கள் கண்காணிக்கும் முறைகள் குறித்தும் பேசினாா்.
மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் பள்ளி கல்லூரிக்குச் செல்லவேண்டும், அடையாளம் தெரியாத, முகம் தெரியாத நபா்கள் யாராவது பேசினால் அவா்களிடம் பேசுவதை தவிா்க்கவேண்டும்.
கைப்பேசி பயன்படுத்தும்போது தெரியாத நபா்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளைத் தவிா்க்கவேண்டும். குறிப்பாக, யாராவது தவறான குறுஞ்செய்தி அனுப்பி பல்வேறு வகையில் தொந்தரவு அளித்தால் உடனடியாக பெற்றோா் அல்லது ஆசிரியா்களிடம் தெரிவிக்கவேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.
நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், வாம் தொண்டு நிறுவனத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் கலந்து கொண்டனா். குழந்தைகள் நல அலுவலக பணியாளா் பூா்ணிமா நன்றி கூறினாா்.
