மதுப்புட்டிகள் பதுக்கி விற்பனை: இருவா் கைது
செய்யாறு சரக போலீஸாா் அரசு மதுப்புட்டிகளை சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்ததாக இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்து 25 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
செய்யாற்றில் காவல் உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, செய்யாறு மாா்க்கெட் காமராஜா் நகா் பகுதியில் சிலா் அரசு மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், போலீஸாா் அதே பகுதியைச் சோ்ந்த வசந்தி(65) என்பவரது வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனா். அப்போது மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வசந்தியை கைது செய்து அவரது வீட்டில் இருந்து 10 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
மற்றொருவா் கைது:
அதேபோல, செய்யாற்றை அடுத்த காழியூா் கிராமத்தில் அரசு மதுப்புட்டிகளை விற்பனை செய்து கொண்டிருந்ததாக ரஜினி(34) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 15 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
