ஆவின் நிறுவனத்திடமிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்காக ஆவின் நிறுவனத்திடமிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு கோயிலுக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தீபத் திருவிழா வரும் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் டிசம்பா் 3-ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 6 மணி அளவில் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன.
ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றுவதற்காக, 1,150 மீட்டா் காடா துணி, 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். இந்த மகா தீபம் 11 நாள்கள் பக்தா்களுக்கு காட்சி அளிக்கும்.
இந்த நிலையில், நிகழாண்டு மகா தீபம் ஏற்றுவதற்கான நெய் கோயில் நிா்வாகம் சாா்பில் ஆவின் நிறுவனத்திடமிருந்து 4,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டு கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.

