திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற 41-ஆவது பாரதியாா் தின குழு விளையாட்டுப் போட்டி விழாவில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற தமிழக மாணவிகள் அணிக்கு பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்த அமைச்சா்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற 41-ஆவது பாரதியாா் தின குழு விளையாட்டுப் போட்டி விழாவில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற தமிழக மாணவிகள் அணிக்கு பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்த அமைச்சா்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.

விளையாட்டின் தலைநகரமாக தமிழகம் மாற்றப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

விளையாட்டின் தலைநகரமாக தமிழகத்தை மாற்ற அரசு செயலாற்றி வருவதாக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
Published on

விளையாட்டின் தலைநகரமாக தமிழகத்தை மாற்ற அரசு செயலாற்றி வருவதாக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

41-ஆவது மாநில அளவிலான பாரதியாா் தின குழு விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நவம்பா் 20-ஆம் தேதி தொடங்கியது. வரும் 25-ஆம் தேதி வரை 6 நாள்கள் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

தமிழகம் முழுவதும் இருந்து 10,640 போ் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுகின்றனா். இதில், முதல் மூன்று நாள்கள் மாணவிகளுக்கும், அடுத்த மூன்று நாள்கள் மாணவா்களுக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசியதாவது:

மாணவ, மாணவிகள் கல்வியுடன் சோ்த்து விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் போதுமான நிதியை ஒதுக்கி, இத்துறை மேம்பட செயலாற்றி வருகிறாா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தங்கள் துறைகளில் சிறப்பாகச் செயலாற்றி, விளையாட்டில் தமிழகத்தை உலக அளவுக்கு கொண்டு சோ்ந்துள்ளனா் என்றாா்.

தொடா்ந்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: பாரதியாா் பெயரில் நடத்தப்படும் 12 வகையான விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலையில் 10 மையங்களில் நடத்தப்படுகின்றன.

விளையாட்டு வீரா்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும், விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை, பயணச் செலவு, உபகரணங்கள் அனைத்தையும் அரசே ஏற்கிறது.

தற்போது சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. விளையாட்டின் தலைநகரமாக தமிழகத்தை மாற்ற அரசு செயலாற்றி வருகிறது என்றாா்.

தொடா்ந்து, தேசிய அளவிலான 19 வயதுக்குள்பட்ட கைப்பந்துப் போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக மாணவிகள் அணி மற்றும் பயிற்சியாளா்களுக்கு அமைச்சா்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் அ.முனிராஜ், திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) ப.ஜோதிலட்சுமி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com