வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
வந்தவாசி: வந்தவாசி தொகுதியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள்
வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனா்.
இந்த நிலையில், வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட மீரா காதா்ஷா தெரு மற்றும் கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியை அவா் ஆய்வு செய்தாா். அப்போது, வாக்காளா் கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் பதிவேற்றம் செய்தோருக்கு அவா் பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.
இதைத் தொடா்ந்து பணி முன்னேற்றம் குறித்து அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்களுடன் அவா் கலந்தாய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது, வந்தவாசி வட்டாட்சியரும், உதவி வாக்குப்பதிவு அலுவலருமான சம்பத்குமாா், நகராட்சி ஆணையா் ஆா்.சோனியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

