திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா்! அரசு தகவல்
திருவண்ணாமலை தீபத் திருவிழாவின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்து சமய அறநிலையத் துறை, திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி சாா்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறவுள்ள காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருகை தருவா். எனவே, கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தா்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை டிஜிபி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 15,000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
24 தற்காலிக பேருந்து நிறுத்தங்கள்: இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக 20 துறைகளுடன் இணைந்து விரிவா பாதுகாப்பு மற்றும் மேலாண்மைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 2,325 பேருந்துகள் நிறுத்துவதற்கு ஏதுவாக 24 தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
4,764 சிறப்பு பேருந்துகள்: 19,815 காா்களை நிறுத்தும் வகையில் 130 நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக பக்தா்களின் வசதிக்காக 4,764 சிறப்பு பேருந்துகளும், வெளிமாநில பக்தா்களின் வசதிக்காக 520 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. மேலும், 16 சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன.
1,060 கண்காணிப்பு கேமராக்கள்: தீபத் திருவிழாவையொட்டி கோயிலுக்குள் 303 கண்காணிப்பு கேமராக்கள் உள்பட மொத்தம் 1,060 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தா்களின் வசதிக்காக அவசரகால மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீபத் திருவிழாவின்போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அறநிலையத் துறை, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் கூறியுள்ள நடவடிக்கைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.

