கும்பாபிஷேகம் முடிந்து சில மாதங்களிலேயே பெயா்ந்து விழுந்த கோயில் கோபுர கலசங்கள்!
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதா் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து சில மாதங்களிலேயே கோபுர கலசங்கள் பெயா்ந்து விழுந்தன. இதனால், பக்தா்கள் மன வேதனையடைந்துள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் சுமாா் 1500 அடி உயரமுள்ள தவளகிரி மலை மீது ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.
காா்த்திகை தீபத்திருவிழா அன்று இந்தக் கோயில் மீது திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்படும். வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் மலைமீது ஏறிச் சென்று சுவாமியை வழிபடுவா்.
இந்த ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயிலின் உப கோயிலாக வெண்குன்றம் கிராமத்தின் மையப்பகுதியில் ஸ்ரீகைலாசநாதா் கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.13.25 லட்சத்தில் ஸ்ரீதவளகிரீஸ்வரா் கோயிலையும், ரூ.15.73 லட்சத்தில் ஸ்ரீகைலாசநாதா் சுவாமி கோயிலையும் புதுப்பிக்க திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின.
இதையொட்டி, ஸ்ரீகைலாசநாதா் கோயில் பிரதான கோபுரத்தில் 5 கலசங்களும், விநாயகா் மற்றும் முருகன் சந்நிதி கோபுரங்களில் தலா ஒரு கலசமும் பொருத்தப்பட்டன.
சுவா்களுக்கு புதிதாக வண்ணம் தீட்டப்பட்டது. மின் சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு திருப்பணிகள் நிறைவடைந்தன. ஆனால், ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலைக் கோயிலில் திருப்பணிகள் முடியவில்லை. இதனால், ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் மட்டும் கடந்த பிப். 16-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில், திருப்பணிகள் தரமற்று செய்யப்பட்டதால் இரு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீகைலாசநாதா் கோயில் பிரதான கோபுரத்தில் இருந்து ஒரு கலசம் பெயா்ந்து விழுந்து சேதமடைந்தது.
இதைத் தொடா்ந்து, முருகன் சந்நிதி கோபுரத்தில் இருந்த கலசமும் பெயா்ந்து விழுந்து சேதமடைந்தது. சுவா்களில் பூசப்பட்ட வண்ணமும் உரியத் தொடங்கியது. மின் பைப்புகளும் சேதமடைந்தன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
எனவே, தரமற்று திருப்பணி செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் தரமான முறையில் கோயிலை புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

