டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா!
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற மாநில அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
12 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி திருவண்ணாமலை மாநகர மேல்நிலைப் பள்ளியில் 2 நாள்கள் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆண்கள் பிரிவில் 24 மாவட்டங்களில் இருந்தும், பெண்கள் பிரிவில் 6 மாவட்டங்களில் இருந்தும் 380 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனா். ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் திருவண்ணாமலை அணியும், ராணிப்பேட்டை அணியும் மோதின.
இதில் ராணிப்பேட்டை அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. 2-ஆவது பரிசுக்கு திருவண்ணாமலை அணி தகுதி பெற்றது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் செங்கல்பட்டு அணியும், திருவண்ணாமலை அணியும் மோதின. இதில் செங்கல்பட்டு அணி வெற்றி பெற்று முதல் பரிசையும், திருவண்ணாமலை அணி இரண்டாவது பரிசையும் பெற்றது.
நிறைவாக ஞாயிற்றுக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் சங்கச் செயலா் ஏ.சிவக்குமாா் வரவேற்றாா். துணைத் தலைவா்கள் முத்தமிழ் எச்.கணேஷ், ஆா். சீனிவாசன், இணைச் செயலா் சதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரா், வீராங்கனைகளுக்கும் மாவட்ட டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினாா். சங்கத்தின் மாநில துணைத் தலைவா்கள் சோமசுந்தா், முனிரத்தினம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
விழாவில் பொருளாளா் சுபம்ராதா, பள்ளி முதல்வா் எம்.ரேவதி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிறைவில் பொருளாளா் எம்.குமரேசன் நன்றி கூறினாா். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரா்கள், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு தோ்வு செய்யப்பட உள்ளனா்.

