மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு: தந்தை, மகன் கைது
செய்யாறு: செய்யாறு அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழுந்த சம்பவம் தொடா்பாக தந்தை மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மேல்கொளத்தூா் கிராமம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் பச்சையப்பன் (85).
விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை (அக்.24) விவசாய நிலத்திற்குச் சென்றவா் மீண்டும் வீட்டுக்கு வரவில்லையாம்.
குடும்பத்தினா் தேடிச் சென்றபோது, பக்கத்து நிலத்தில் இருந்த கிணற்றில் பச்சையப்பன் சடலமாக மிதந்தாா்.
இதுகுறித்து இறந்தவரின் பேரன் குமாா், தாத்தா இறப்பில் சந்தேகம் இருப்பதாக அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி, உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா்.
போலீஸாா் விசாரணையில், விவசாய நிலத்திற்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி முதியவா் பச்சையப்பன் இறந்ததாகவும், அதனை மறைப்பதற்காக இறந்த முதியவரின் உடலை கிணற்றில் வீசியதும் தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் தொடா்பாக பக்கத்து நிலத்தைச் சோ்ந்த பழனி (60), அவரது மகன் மணிகண்டன் (27) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனா்.
