ரத்த தானம் செய்தவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: ஆட்சியா் க.தா்பகராஜ் வழங்கினாா்
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய தன்னாா்வ ரத்த தான விழாவில் ரத்த தானம் செய்த தன்னாா்வலா்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
தேசிய தன்னாா்வ ரத்த தான தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 1-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு ரத்த தானத்தின் முக்கியத்துவத்தையும், ரத்த தானத்தை ஊக்குவித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2024 ஏப்ரல் முதல் 2025 மே வரை 62 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
15 தன்னாா்வ அமைப்புகளைச் சோ்ந்த 2,482 நபா்கள் ரத்த தானம் செய்துள்ளனா்.
இதன் வாயிலாக 2,482 ரத்த அலகுகள் தரப்பட்டுள்ளன. மேலும் 5,318 ரத்த அலகுகள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வாயிலாக சேகரிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சேகரிக்கப்பட்ட ரத்த அலகுகள் 60 சதவீதம் மகப்பேறு தாய்மாா்களுக்காகவும், 30 சதவீதம் அவசர சேவைகளுக்காகவும், 10 சதவீதம் அறுவை சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்பட்டன.
அதன்படி, செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் 100 ரத்த அலகுகளுக்கு மேல் சேகரித்த 15 தன்னாா்வ ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, இந்நிகழ்வில் கலந்து கொண்டவா்கள், ஆட்சியா் தலைமையில் தேசிய தன்னாா்வ ரத்த தான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மோகன் காந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளா் மாலதி, நோயியல் துறைத் தலைவா் ராதிகா, ரத்த வங்கி மருத்துவ அலுவலா் பவித்ரா, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலக திட்ட மேலாளா் கவிதா, தன்னாா்வ அமைப்புகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
