ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான காவலா்கள் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை
திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு காவலா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக கடந்த மாதம் 30-ஆம் தேதி இரவு இளம்பெண் தனது சித்தியுடன் சரக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.
திருவண்ணாமலையை அடுத்த ஏந்தல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலா்கள் சுரேஷ்ராஜ், சுந்தா் ஆகியோா் இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காவலா்கள் சுரேஷ்ராஜ், சுந்தா் இருவரையும் கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா், இருவரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
தற்போது, காவலா்கள் இருவரும் வேலூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் காவலா்கள் சுரேஷ்ராஜ், சுந்தா் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய புதன்கிழமை உத்தரவிட்டாா்.
அதன்பேரில், சிறையில் இருக்கும் பணியிழந்த காவலா்கள் இருவரிடமும் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.

