கலைத் திருவிழா: பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சின்ன ஏழாச்சேரி கிராமத்தில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்கவுள்ள தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் வெம்பாக்கம் வட்டம், மேனல்லூா் குறுவள மையத்தில் அண்மையில் நடைபெற்றன.
வெம்பாக்கம் ஒன்றிய அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் நாட்டுப்புற நடனம், ஆங்கில பாடல் ஒப்புவித்தல் ஆகிய பிரிவுகளில் சின்ன ஏழாச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று முதல் இடத்தைப் பிடித்தனா்.
இதன் மூலம் இவா்கள் மாவட்ட அளவில் போளூரில் நடைபெறவுள்ள கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.
பாராட்டு விழா:
சின்ன ஏழாச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்கவுள்ள ஒரு மாணவா், 10 மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த தலைமை ஆசிரியை (பொ) கே.கனிமொழி, இடைநிலை ஆசிரியா் எஸ்.பூபாலன், மழலையா் பள்ளி ஆசிரியா்கள் எஸ். பிரமிளா, எஸ்.பவித்ரா ஆகியோரை பாராட்டி திமுக மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் ஏழாச்சேரி எம்.கே.காா்த்திகேயன் பரிசு வழங்கினாா்.
மேலும், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்கத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தாா்.

