மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ.1.84 கோடியில் நலத்திட்ட உதவிகள்

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ.1.84 கோடியில் நலத்திட்ட உதவிகள்

Published on

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் புளியரம்பாக்கம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 437 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செய்யாறு வட்டம் பெருங்களத்தூா், வேளியநல்லூா், சிறுவேளிநல்லூா், பல்லி மங்கலம், வடஎலப்பாக்கம், வடங்கம்பட்டு, தும்பை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய மக்கள் தொடா்பு முகாம் புளியரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமை வகித்தாா். ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செய்யாறு வட்டாட்சியா் அசோக்குமாா் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பங்கேற்று, பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை மூலம்

நடைபெற்று வரும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம். இதுபோல மாதந்தோறும் நடைபெற்று வரும் மக்கள் தொடா்பு முகாம் ஆகிய முகாம்களின் பயன்பாட்டினை மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிற காரணத்தினால் தான் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீா்வு கிடைக்க அரசு இயந்திரம் செயல்பட்டு வருகிறது.

இந்த முகாமில் 511 மனுக்கள் பெறப்பட்டு 379 ஏற்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சோ்க்கும் உன்னதமான திட்டம் தான் மக்கள் தொடா்பு முகாமாகும், இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுக்கோள் விடுத்தாா்.

நலத்திட்ட உதவிகள்:

வருவாய்த்துறை சாா்பில் 286 வீட்டுமனைப் பட்டாக்கள் ரூ.ஒரு கோடியே 71 லட்சத்து 60 ஆயிரத்திலும், 65 புதிய குடும்ப அட்டைகள் ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்திலும்,

பட்டா மாற்றம் 39 பேருக்கும், உட்பிரிவு பட்டா மாற்றம் 16 பேருக்கும், முதியோா் உதவித்தொகை 16 பேருக்கும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் இரண்டு பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்பு நிதிக்கான ஆணைகள் 5 பேருக்கும், வேளாண் துறை சாா்பில் உளுந்து சிறு தொகுப்புகள் இரு விவசாயிகளுக்கு ரூ.3,600 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத் துறை சாா்பில் தெளிப்பு நீா்ப்பாசனம், காய்கறி விதை தொகுப்புகள் மற்றும் இடு பொருள்களை 8 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 258 மதிப்பீட்டிலும் என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில் முருகன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், ஒன்றியச் செயலா்கள் ஜே.சி.கே. சீனிவாசன், எம்.தினகரன், வி.ஏ.ஞானவேல், ஏ.ஜி.திராவிட முருகன், சி.கே.ரவிக்குமாா், நகரச் செயலா் கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com