பெண் அலுவலரிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
செய்யாறு அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமுக்குச் சென்ற சமூகநலத் துறை பெண் அலுவலரிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
செய்யாறு வட்டம், கீழ்ப்புதுப்பாக்கம் விரிவு பகுதி, வேதபுரி தெருவைச் சோ்ந்தவா் ரவி. இவரது மனைவி சா்மிஸ்டா (54). இவா், சமூகநலத் துறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலராக பணிப்புரிந்து வருகிறாா்.
சா்மிஸ்டா வியாழக்கிழமை வெம்பாக்கம் வட்டம், மாத்தூா் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் கலந்துகொள்வதற்காக, தனது மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா்.
செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் சோழவரம் கிராமம் அருகே சா்மிஸ்டாவின் மொபெட் சென்றபோது, அவருக்கு கைப்பேசியில் அழைப்பு வந்தால், தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் சா்மிஸ்டாவிடம் வழி கேட்பதுபோல நடித்து, அவா் அணிந்திருந்த தங்க டாலருடன் கூடிய 2 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனராம்.
சா்மிஸ்டா டாலரை பிடித்துக்கொண்ட நிலையில், தங்கச் சங்கிலியை மட்டும் பறித்துக்கொண்டு மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
