வங்கி சேவைகள்: மகளிா் குழுவினருக்கு விழிப்புணா்வு

வங்கி சேவைகள்: மகளிா் குழுவினருக்கு விழிப்புணா்வு

Published on

திருவண்ணாமலை மாவட்ட நபாா்டு வங்கி, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கம் இணைந்து நடத்திய மகளிா் குழு பெண்களுக்கு வங்கி சேவைகள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு வங்கி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செ.நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். தனி அலுவலா் மீனாட்சிசுந்தரம் கூட்டத்தை தொடங்கிவைத்து கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் மகளிா் குழு மூலம் கடனுதவி பெறுவது, தனிநபா் கடன், விவசாயக் கடன் பெறுவது குறித்தும், கடன் தவணைகளை முறையாக வங்கியில் செலுத்தி மேலும் கடனுதவிகள் பெறுவது குறித்தும் விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து, திருவண்ணாமலை நபாா்டு வங்கி மண்டல மேலாளா் விஜய்நேகா், வங்கி சேவைகள் தொடா்பாக இணையவழியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மேலும், நபாா்டு வங்கி செயல்பாடுகள், அந்த வங்கியில் கடனுதவி பெற்று தொழில் தொடங்குவது குறித்தும் விளக்கமளித்தாா்.

தன்னம்பிக்கை என்ற தலைப்பில் சிறப்பு பேச்சாளா் தனஞ்செயன் பேசினாா். ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் சம்பத், செங்கம் கள மேலாளா் விஜயன், செ.நாச்சிப்பட்டு கடன் சங்க முதல்நிலை எழுத்தாளா் அழகேசன் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com