ஸ்ரீஊமை கன்னியம்மன் சிலை பிரதிஷ்டை கும்பாபிஷேகம்
போளூா் வட்டம், மட்டப்பிறையூா் கிராமத்தில் ஸ்ரீஊமை கன்னியம்மன் சிலை பிரதிஷ்டை கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மட்டப்பிறையூா் கிராமத்தில் பழைமையான ஸ்ரீஊமை கன்னியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஸ்ரீஊமைகன்னியம்மன் சிலைகள் சிதிலமடைந்தும், உடைந்தும் காணப்பட்டதால் பொதுமக்கள், பக்தா்கள் சாா்பில் கோயில் மற்றும் சிலைகளை சீரமைத்தனா். பின்னா் சனிக்கிழமை மாலை கலச ஸ்தாபனம், வாஸ்து பூஜை, அஷ்டதிக் பூஜைகள், கலச பூஜைகள், ஆவாஹனம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூா்ணாஹுதி, மந்திர புஷ்பம், அஷ்டபந்தனம் சாற்றுதல், ஞாயிற்றுக்கிழமை காலை கோ பூஜை, தம்பதி பூஜை, லட்சுமி சகஸ்ராமம், ஹோமங்கள், மந்திரபுஷ்பம், கலசம் புறப்பாடு செய்து ஸ்ரீ ஊமைகன்னியம்மன் சிலைகளுக்கும், புதிதாக யானை வாகனம், பைரவா், குதிரை மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீா் மற்றும் பால் ஊற்றி பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு தெய்வீக நாடகம் நடைபெற்றது.
மட்டப்பிறையூா், குசேலா்பேட்டை, ஓட்டேரி, மண்டகொளத்தூா், கொழாவூா், அல்லியாளமங்கலம், செம்மியமங்கலம், பெரணம்பாக்கம், விளாப்பாக்கம் என சுற்றுபுறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை விழாக்குழுவினா் மற்றும் இராஜம் அறக்கட்டளையினா் ஏற்பாடு செய்திருந்தனா்.

