‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வந்தவாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நல உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
Published on

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், வந்தவாசி வட்டத்தில் வியாழக்கிழமை முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த உயா் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் ஒரு வட்டத்தில் தங்கி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் வந்தவாசி வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வந்தவாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மருந்துகள் இருப்பு குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

மருத்துவ சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுகிா, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் நல்ல முறையில் அணுகுகிறாா்களா என்று அவா் நோயாளிகளிடம் கேட்டறிந்தாா்.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல கூடுதல் கட்டடப் பணிகளை அவா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து வந்தவாசி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, ஆரணி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் பங்கேற்றாா்.

அப்போது, வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற பல்வேறு துறை அதிகாரிகள், இதுகுறித்த அறிக்கையை ஆட்சியா் க.தா்பகராஜிடம் சமா்ப்பித்தனா். இதனை ஆய்வு செய்த அவா், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

நலத்திட்ட உதவிகள்

மேலும், 5 பேருக்கு முதியோா் ஓய்வூதியம், 2 பேருக்கு பட்டா மாற்றம், 2 பேருக்கு மருந்து தெளிப்பான், 2 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.மணி, செய்யாறு சாா்-ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், வந்தவாசி வட்டாட்சியா் ஜெயவேல், நகராட்சி ஆணையா் ஆா்.சோனியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com