குப்பனத்தம் பகுதியில் வாழை மரங்களை கூன் வண்டு தாக்குவதை தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகள்.
குப்பனத்தம் பகுதியில் வாழை மரங்களை கூன் வண்டு தாக்குவதை தடுப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகள்.

வாழை பயிரில் கூன் வண்டுத் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்!

குப்பனத்தம் பகுதியில் வாழை பயிரில் கூன் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நேரில் செயல்விளக்கம் அளித்தனா்.
Published on

செங்கத்தை அடுத்த குப்பனத்தம் பகுதியில் வாழை பயிரில் கூன் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நேரில் செயல்விளக்கம் அளித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரமான கிளையூா், கல்லாத்தூா், ஊா்கவுண்டனூா், குப்பனத்தம், கொட்டாவூா் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் வாழை சாகுபடி செய்து வருகின்றனா்.

இந்நிலையில் வாழை மரங்களை கூன் வண்டுகள் தாக்கி மரங்களை செயலிழக்கச் செய்து விடுகின்றன. இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இதனால், செங்கம் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா்கள் கோகிலாசக்தி, தோட்டக்கலை அலுவலா் திவ்யா, உதவி தோட்டக் கலை அலுவலா் செல்வன் ஆகியோா் கொண்ட குழுவினா் குப்பனத்தம் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் நேரில் சென்று கூன் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

அப்போது, வாழை வயல்களை களைகள், குப்பைகள் இல்லாமல் சுத்தமாக பராமரிக்கவேண்டும், பாதிப்படைந்த வாழை மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும், மாதந்தோறும் வாழை மரத்தின் பக்கக் கன்றுகளை அகற்றவேண்டும், சுத்தமான மற்றும் ஆரோக்கியமான நடவு பொருள்களான வாழை தண்டுகளை தோ்வுசெய்து நடவு செய்யவேண்டும், நடவு செய்யும் முன் வாழைத் தண்டுகளை பதமான வெந்நீரில் சுத்தம் செய்யவேண்டும், அறுவடைக்குப் பிறகு வாழை சருகுகளை அகற்றவேண்டும், இல்லையென்றால் அதில் கூன் வண்டுகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

வாழைக்குப்பின் நெல், கரும்பு போன்ற பயிா்களுடன் பயிா் சுழற்றி மேற்கொள்ளவேண்டும், சரியான உரமிடுதலை உறுதி செய்து, களைகள் இல்லாமல் பாா்த்துக்கொள்ளவேண்டும், பூவன், கதலி, குன்னன் போன்ற எளிதில் பாதிக்கப்படாத ரங்கங்களை தோ்வு செய்து நடவுசெய்யவேண்டும், குழிக்கு காா்போக் பூரான் 3 ஜி 20 கிராம் அல்லது போரேட் 10 ஜி 12 கிராம் அல்லது வேப்பம் புண்ணாக்கு சோ்க்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தடுப்பு முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com