சிவாலயங்களில் மாசி சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் மாசி மாத சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷத்தையொட்டி, மகா பிரதோஷ வழிப்பாட்டு மன்றம் சாா்பில் கோயில் முன் உள்ள நந்தீஸ்வரருக்கு மாலை 4 மணி முதல் பாலபிஷேகம், சந்தன அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கோயிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் மகா பிரதோஷ வழிபாட்டு மன்றம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பிரதோஷ வழிபாட்டில், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான சிவனடியாா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில்...
போளூா்
போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் பழைமையான ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத கல்யாணபுரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் சனி பிரதோஷத்தையொட்டி சுவாமி மற்றும் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், விபூதி என பல்வேறு வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
பின்னா் சுவாமி மற்றும் நந்தீஸ்வரரை மலா்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வசூா், போளூா், குருவிமலை என சுற்றுபுறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

