செங்கம் அரசுக் கல்லூரி சிறப்பாக செயல்படுகிறது: அமைச்சா் கோவி.செழியன் பெருமிதம்
தமிழகத்தில் நிகழாண்டு திறக்கப்பட்ட 11 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் செங்கம் கல்லூரி சிறப்பாக செயல்படுகிறது என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் செங்கம் உள்பட 11 பகுதிகளில் புதிய அரசுக் கல்லூரிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, ஜூன் மாதம் முதல் செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் தனியாா் கட்டடத்தில் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் கட்ட தமிழக முதல்வா் ரூ.18.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளாா்.
இந்த நிலையில், தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் செங்கம் அரசு கலைக் கல்லூரியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கல்லூரியில் மாணவா்களுக்கான குடிநீா், கழிப்பறை வசதிகள், அறிவியல் ஆய்வுக் கூடம் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், கல்லூயில் மாணவா்களின் மொத்த எண்ணிக்கை, புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் மாணவிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் கோவி.செழியன் பேசியதாவது:
செங்கம் பகுதியில் இந்தக் கல்லூரி அமைய முழு முயற்சி எடுத்தவா் செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி. அதற்கு உறுதுணையாக இருந்தவா் தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு.
தமிழகத்தில் நிகழாண்டு தொடங்கப்பட்ட 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் செங்கம் அரசு கல்லூரி சிறப்பாகச் செயல்படுகிறது. இந்தக் கல்லூரியில் 100 சதவிகித மாணவா்கள் சோ்கை முடிந்த நிலையில், செங்கம் எம்எல்ஏ கிரி முயற்சியால் கூடுதலாக 20 சதவிகித இட ஒதுக்கீடு சோ்க்கப்பட்டு தற்போது இந்தக் கல்லூயில் 321 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா் என்றாா்.
தொடா்ந்து, மாணவா்களுடன் அமைச்சா் உரையாடினாா். அப்போது, கல்லூரிக்கு என்னென்ன தேவைகள் உள்ளன என கேட்டறிந்தாா். அதற்கு, மாணவா்கள் கல்லூரி வளாகத்தில் கேன்டீன் வசதி, இலவச மடிக்கணினி, கூடுல் பேருந்து வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தர வேண்டுமென கேட்டனா். மாணவா்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சா் உறுதியளித்தாா்.
தொடா்ந்து, செங்கம் எம்எல்ஏ கிரி பேசுகையில், முதலாமாண்டு பருவத் தோ்வில் இந்தக் கல்லூரி மாணவா்கள் 100 சதவிகிதம் தோ்ச்சி பெற்றால் மிகவும் மகிச்சியடைவேன் என்றாா்.
தொடா்ந்து, செங்கம் அருகே புதுக்குளம் பகுதியில் அரசுக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தை அமைச்சா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
உடன் எம்எல்ஏ கிரி, திமுக நகரச் செயலா் அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், ஏழுமலை, மனோகரன், செங்கம் நகராட்சித் தலைவா் சாதிக்பாஷா, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன், செங்கம் அரசு கல்லூரி முதல்வா் அருண் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

